இராசையா லோகாநந்தன்
இராசையா லோகாநந்தன் - மேலும்
இராசையா லோகாநந்தன் – மேலும்
மலையகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மகத்தான கலைஞன். கலை மக்களுக்கானது என இயங்கும் ஒரு சமூகப் போராளி.நாடகமே தன் வாழ்வாகக் கொண்டவர். தமிழிலும் சிங்களத்திலும் ஆற்றுகைகளை நிகழ்த்தும் பாண்டித்தியம் மிக்கவர்.புகழ்பெற்ற சிங்கள நாடகப் பரப்பில் பரிசு பெற்ற தமிழ் நாடகன். எழுத்து,மொழிபெயர்ப்பு, நடிப்பு, நெறியாள்கை,பாடகர், இசை எனப் பன்முக ஆற்றல் படைத்தவர். எந்தப் பாத்திரமும் பொருந்தி வரும் வசீகரக் கலைஞன்.
கல்லூரி நாட்களில் லோகாநந்தனின் கலையீடுபாட்டுக்கு உந்துதல் அளித்த வகுப்பாசிரியை ரேணுகாதேவி அவர்களின் வழிகாட்டலில் ‘மக்கள் களரி’ என்ற நாடக அமைப்பில் ஒரு முழுநேர ஊழியராக 2006ல் இவர் இணைந்து கொண்டார்.பிரபல நாடகக்கலைஞர் பராக்கிரம நிரியெல்ல மற்றும் மறைந்த மூத்த கலைஞர் எச்.ஏ. பெரேரா ஆகியோர் இணைந்து மக்கள் களரி’ என்ற நாடக அமைப்பை 2002 ல் உருவாக்கியதோடு சர்வதேச தரத்திலான நாடகப் பயிற்சிகளும் இவர்களால் அளிக்கப்பட்டன.
சிங்களம், தமிழ் இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற இவர்பராக்கிரம நிரியெல்ல எழுதிய ‘செக்குவ’
என்ற சிங்கள நாடகத்தைத் தமிழுக்கு
மொழிபெயர்த்தார். 1976ல் எழுதப்பட்ட
இந்நாடகம் செக்கிழுக்கும் மாடு ஒன்றை
மையமாக வைத்து இலங்கையின் அரசியல் வரலாற்றைச் சொல்லியது. 2008ல் தமிழில் மேடையேறிய ‘செக்கு’ என்ற இந்நாடகத்தின் பிரதான பாத்திரமான மாடாக வேடமேற்று லோகாநந்தன் சிறப்புச் செய்தார்.2008ன் பிற்பகுதியில் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் ‘எந்தையும் தாயும்’ நாடகத்தை மக்கள் களரிக்காக இவர் சிங்களத்தில் மொழி பெயர்த்தார். ‘ஹிரு நெகனதுரு’ என்ற இந்த சிங்கள நாடகத்தில் தமிழ்க் கலைஞர்களும் ‘எந்தையும் தாயும்’என்ற தமிழ் மேடையேற்றத்தில் சிங்களக் கலைஞர்களும் நடித்துப் புதுமை செய்தனர். இதில் ஆரம்பத்தில் கண்ணனாகவும் பின்னர் பெரிய ஐயாவாகவும் லோகாநந்தன் நடித்திருந்தார்.
சூத்திரகர் என்ற நாடகாசிரியர் எழுதிய
‘விருட்சகடிகம்’ எனும் வடமொழி நாடகத்தை ‘மெட்டிக்கரத்தைய’ என்ற பெயரில் சிங்களத்தில் மக்கள் களரியினர் மேடையேற்றினர். இதில் விதூசகன் பாத்திரத்தில் நடித்த இவர் 2010 நடைபெற்ற தேசிய சிங்கள நாடக விழாவில் சிறந்த துணை நடிகராகப் பரிந்துரை செய்யப்பட்டார்.இதன் பின்னர் லோகாநந்தன் தமிழில் மொழி பெயர்த்த இந்நாடகத்தை மக்கள் களரியும் மட்டக்களப்பு விபுலானந்த கற்கை நிறுவனமும் இணைந்து ‘மிருட்ச
கடிகம்’ என்ற தலைப்பில் மேடை யேற்றினர்.பராக்கிரம நிரியெல்ல நெறியாள்கை செய்த இந்நாடகத்துக்கு நிர்வாக இயக்குனராக பேராசிரியர் சி. மௌனகுரு பணியாற்றினார். லோகாநந்தன் நடிகர்களுக்கான பயிற்சியையும் சுமுது மல்லவராய்ச்சி நாடகத்தின் இசையையும் வழங்
கியிருந்தனர்.
ஈழத்துத் திரைப்படமான பொன்மணியை இயக்கிய கலாநிதி தர்மசேன பத்திராஜா எழுபதுகளில் எழுதிய ‘கொற சக அந்தைய’ என்ற சிங்கள நாடகத்தை இவர் தமிழுக்கு மொழிபெயர்த்தார். முடவன் வழிகாட்டலில் முடவனை முதுகில் சுமந்த படி அரசகுமாரியைக் காணச் செல்லும் பார்வையற்றவரின் கதை. அபத்தபாணியில் எழுதப்பட்ட பிரபலமான நாடகம் அது.‘பயணிகள்’ என்ற பெயரில் தமிழில் மேடை யேற்றப்பட்ட இந்நாடகத்தில் முடவனாக லோகாநந்தன் நடித்திருந்தார். மக்கள் களரியைச் சேர்ந்த கலைஞர்கள்
லீலாவதி,ரொனிக்கா சாமலி ஆகியோர் இணைந்து இந்நாடகத்தை நெறியாள்கை செய்திருந்தனர்.
2011ல் இடம் பெற்ற மத்தியமாகாண இளைஞர் நாடக விழாவில் சிறந்த நடிகர், சிறந்த பிரதியாக்கம் ஆகிய பரிசுகள் கலைஞர் லோகாநந்தனுக்கு கிடைத்தன. அவ்வருடம் நடைபெற்றதேசிய நாடக விழாவில் மேடையேற்றப்பட்ட போது சிறந்த நடிகருக்கான பரிசை
பார்வையற்றவராக நடித்த சிவனேசன்
பெற்றுக்கொண்டார். ‘பயணிகள்’ நாடகம் 2012ல் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச
நாடக விழாவிலும் மேடையேற்றப்பட்டு
பாராட்டுப் பெற்றது.
மக்கள் களரியினர் மேடையேற்றிய மேலும்பல சிங்கள நாடகங்களை இவர் தமிழுக்கு மொழிபெயர்த்தார். சுரங்கம், இருளைத் துளைத்து,திருடன் வந்தான்,
இருட்டும் வெளிச்சமும், கல்யாணக்கதை,அப்பா, நான் அரைக்கம்பன் என்பன அவற்றுள் சிலவாகும். இவை தவிர மக்கள் களரியினர் வெளியிட்ட ‘சிங்கள நாடககலை ஆளுமைகள்’ என்ற நூலின் உதவி ஆசிரியராகவும் இவர் பணியாற்றினார்.நாடகப் பிரதியாக்கத்திலும் புதிய சிந்த
னைகளைப் புகுத்திய இவர் வகுப்பு,
இரும்பில் பொருத்திய இதயம், மெல்ல
விடிகிறது, லயத்துக் கோழிகள், அடகுக்கடை அபூன் ஆகிய நாடகங்களை எழுதி,இயக்கி மேடையேற்றினார். 2015ல் தேசியதமிழ் நாடக விழாவில் ‘இரும்பில் பொருத்திய இதயம்’ நாடகத்துக்கான சிறந்த பிரதி,சிறந்த இயக்குனர் விருதும் 2016ல் ‘வகுப்பு’ நாடகத்துக்கான சிறந்த இயக்குனர் விருதும் அஜந்தன் சாந்தகுமார் இயக்கிய ‘கல்யாணக்கதை’ நாடகத்துக்கான சிறந்த நடிகர் விருதும் இவருக்குக் கிடைத்தன.
மேலும் 2014ல் இடம்பெற்ற தேசிய இளை
ஞர் நாடக விழாவில் மேடையேறிய லீலா
வதியின் ‘பறையன்’ நாடகத்துக்காக
சிறந்த நடிகர் விருது கிடைத்ததும் குறிப்
பிடத்தக்கது.பிரக்டின் “round heads and pointed heads”என்ற நாடகத்தை மக்கள் களரியினர் சிங்களத்தில் மேடையேற்றினர். ஒரு அரச அதிகாரம் எவ்வாறு செயற்படும் என்பதை விளக்கும் இந்நாடகத்தை லோகாநந்தனும் சுமுது மல்லவராய்ச்சியும் இணைந்து இயக்கினர். இதில் நடித்ததன் மூலம் 2016ல் நடைபெற்ற தேசியசிங்கள நாடக விழாவில் சிறந்த துணை நடிகராகத் தெரிவான முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றார்.
தற்பொழுது மக்கள் களரி நாடகக்குழுவில் இருந்து விலகி சுயாதீனமாக நாடகத்துறையில் ஈடுபடுகிறார்.
நடிகர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்,நெறியாளர், என தொடர்ந்தும் நாடகப்பணி ஆற்றி வரும் இராசையா லோகாநந்தன் அவர்களின் நாடகப் பயணம் தொடர நாடகப்பள்ளியின் வாழ்த்துக்களையும், ஆதரவினையும் வழங்கி நிற்கின்றோம்.
“தனிவழியமைத்து தன் வழி தொடர்க”
பா.நிரோஷன்
நாடகப்பள்ளி