அன்று யூலியஸ்

முழுப்பெயர் அரியநாயகம் அன்று யூலியஸ்
பிறந்த திகதி 1982.07.08
மாவட்டம், நாடு யாழ்ப்பாணத்தில் குருநகர், இலங்கை
கலைத்துறை கூத்து,நாடகம்,ஒப்பனை
சமூகவலைதளம் https://www.facebook.com/andrew.julius.773/about
அரியநாயகம் அன்று யூலியஸ் --- மேலும்

அரியநாயகம் அன்று யூலியஸ் யாழ்ப்பாணத்தில் குருநகரை பிறப்பிடமாக கொண்டவர்.யாழ்/மத்திய கல்லூரியில் எனது பாடசாலைக் கல்வியைக் கற்றவர். சிறு வயதிலிருந்தே கலைமீது பற்றுக்கொண்ட இவர் பாடசாலைக் காலத்திலே “முயலுவோம் முயலுவோம்” என்ற சிறுவர் நாடகத்திலேயே அறிமுகமானார். இவரது நடிப்புத்திறனில் நம்பிக்கை கொண்ட ஆசிரியர்கள் “தாவீதும் கோலியாத்தும்” கூத்துருவ நாடகத்திலும் ஏனைய நாடகங்களிலும் இணைத்துக் கொண்டனர்.

பாடசாலைக் காலத்தின் பின்னர் திருமறைக் கலாமன்றத்தில் ஓர் அங்கத்தவனாக இணைந்து கொண்டு அங்கு நாடகம், நடனம், நாட்டுக்கூத்து, இசை நாடகம், பாட்டு,ஒப்பனை, வேட உடை வடிவமைப்பு ஆகியவற்றில் பயிற்சிகளைப் பெற்று ஒரு பல்துறைக் கலைஞனாக உருவெடுத்து நிற்கின்றார்.

திருமறைக் கலாமன்றத்தின் பிரதான வளவாளர்களில் ஒருவராக இருப்பதோடு பாடசாலைகள், பிரதேச செயலகங்கள், கிராமியக் கலை மன்றங்கள் முதலியவற்றில் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கிராமியக் கலைகள் தொடர்பாகவும்,ஆற்றுகைகள் பற்றியும் பயிற்சிப் பட்டறைகளை இன்று வரை ஆற்றி வருகின்றார்.

O/L ,A/L மாணவர்களுக்கு நாடகமும் அரங்கியலும் பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் முகமாக அவர்களுக்கு ஆலோசனைகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் வழங்கி வருகின்றார்.இது தவிர பெரும் சவால்கள் மத்தியில் பாடவோ ஆடவோ முடியாத இளைஞர்கள் பலரை தெரிவு செய்து பயிற்சிகளை வழங்கி நாட்டுக்கூத்துக்களை நெறியாள்கை செய்து அரங்கேற்றி வருகிறார்.

திருமறைக் கலாமன்றத்தில் வேட உடை, ஒப்பனைப் பிரிவுப் பொறுப்பாளராகவும், அங்கு மேடையேற்றப்படும் கலைப் படைப்பான திரைப்படங்களின் காட்சிக்கு உதவி நெறியாள்கை செய்பவனாகவும், ஆற்றுகையாளனாகவும் பங்காற்றி வருகிறார். மேலும் பல கிராமிய நடனங்களையும் வடிவமைத்து நெறிப்படுத்தியுள்ளார்.

.பெற்ற விருதுகள்..

*யாழ்/பிரதேச செயலகத்தின் 2014 க்கான கலாசார விழாவில் கூத்துத் துறையில் இவர் ஆற்றிய சேவைக்காகப் பாராட்டுத் தெரிவித்து ‘இளங்கலைஞர்’ விருது வழங்கி கௌரவித்தனர். * 2017 ஆம் ஆண்டு வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக் களத்தினால் நடாத்தப்பட்ட பண்பாட்டுப் பெருவிழாவில் கூத்துக் கலைத் துறைக்காக “இளங்கலைஞர்” விருதினை வழங்கி கௌரவித்தனர். *2018 ஆம் ஆண்டு கலைத்துறை மூலம் சமூக மேம்பாட்டிற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டும் வண்ணம் குருநகர் இளைஞர் கலைக் கழகம் “கலையியல் செல்வன் என்ற விருதினை வழங்கி கௌரவித்தது.

இவரது கலைப் பயண வாழ்வில் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள பாடசாலைகள், கலைமன்றங்கள் முதலியவற்றிலும் பணியாற்றியதோடு இதன் அடுத்த படியாக 2015ஆம் ஆண்டில் திருமறைக் கலாமன்றம் மேற்கொண்ட ஜேர்மனிக்கான கலைப் பயணத்திலும் ஒருவராக அங்கம் வகித்துப் பணியாற்றியுள்ளார்.

நெறியாள்கை செய்யப்பட்ட ஆற்றுகைகள்..

* “குருசபதம்” தென்மோடி நாட்டுக்கூத்து *”ஏகலைவன்” தென்மோடி நாட்டுக்கூத்து *குவேனி *”அனைத்தும் அவரே” தென்மோடி நாட்டுக்கூத்து *”கொல் ஈனுங் கொற்றம்”கூத்துருவ நாடகம் *”அற்றைத் திங்கள்” கூத்துருவ நாடகம் உதவி நெறியாள்கை *தமிழாடல்(நடனவகை) *பிரணவா (நடனவகை)

தொடர்ந்தும் பல குறும் திரைப்படம், பாடல்கள், விளம்பரப்படங்கள் போன்றவற்றுக்கு வேட உடை, ஒப்பனைப் பணிகளை செய்து கொண்டு வருகின்றார். பாடசாலைகள், ஆலயங்கள், பல்கலைக்கழகங்கள், பிரதேச செயலாகங்கள், சனசமூக நிலையங்கள், நிறுவனங்கள் இவ்வாறு இலங்கையில் உள்ள பல்வேறு இடங்களில் பிரதான வளவாளராகவும் பணியாற்றி வருகிறார்.