நாடகங்களில் ஒப்பனை
பாரம்பரிய அரங்குகளை அடிப்படையாகக் கொண்டது… ஒப்பனை எனும் போது ‘உடைக்கு வெளியே ஏனைய உடற்பாகங்கள் என்பவற்றுக்கு வேண்டிய பூச்சுக்களைப் பூசுதல் ஒப்பனை எனப்படும். ஒப்பனையானது அரங்கின் தொடக்க காலத்திலிருந்தே முக்கிய பங்கினை வகித்து வருகின்றது. ஆக ஒப்பனைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. சுருக்கமாக, வரலாற்று ரீதியாக ஒப்பனையினை விளங்கிக் கொண்டு ஒப்பனையின் நுணுக்கங்களையும் அதனை எவ்வாறு பாரம்பரிய அரங்குகளுக்கு பயன்படுத்த முடியும் என்பது பற்றியும் பார்த்தல் சிறப்பாக அமையும்.
‘ஒப்பனைக் கலை இன்று நேற்றுத் தோன்றியதில்லை. சுவற்றை அழகுபடுத்தும் சித்திரங்கள், ஓவியங்கள், பாறை ஓவியங்கள், பானை ஓவியங்கள், ஒப்பனையோடு கூடிய பொம்மை முகங்கள் ஆகின கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பனை செய்கின்ற வழக்கு இருந்திருக்க வேண்டுமென்பது தெளிவாகின்றது. ‘புராதன அரங்கில் ஒப்பனை இட்டே நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். மிருகங்களைப் போல பாவனை செய்த மனிதர்கள் அதற்கான ஒப்பனையினையும் செய்து கொண்டனர். சடங்கு நிலைப்பட்ட அரங்குகளிலும் நிகழ்த்துபவர்கள் ஒப்பனையிட்டே சடங்குகளை நிகழ்த்தினர். பூசாரி, குரு, புரோகிதன் என அழைக்கப்பட்டவர்கள் தங்களை வேறுபடுத்த ஒப்பனையுடனான சடங்களிக்கையாளர்களாகவே தொழிற்பட்டனர். பாரம்பரிய அரங்குகளில் ஒப்பனையானது மரபைப் பேணுகின்ற முறையில் அமைந்திருந்தது.
மின்சாரம் இல்லாத முன்னைய நாட்களில் அரங்களிக்கைகளில் ஒப்பனை முக்கியமானதாக இருந்தது. இரவு நேரங்களில் பெரும்பாலும் இவை இடம்பெறுவதால் பார்வையாளர்களை தம்பக்கம் ஈர்க்க ஒப்பனை பெரிதும் உதவியது. மேலைத்தேய அரங்க வரலாற்றில் குறிப்பாக கிரேக்க அரங்கில் ஒப்பனை பற்றிப் பாரத்தோமானால், ஒரு நடிகனே பல பாத்திரங்களைத் தாங்கி நடிப்பதால் முகமூடிகளே பெரும்பாலும் பாவிக்கப்பட்டன. இம்முகமூடிகளினூடாக அப்பாத்திர குணாம்சங்களை வெளிப்படுத்திக் காட்டினர். கிரேக்க அரங்கு 15,000ற்கு மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்டிருந்ததால் நடிகர்களுக்கான ஒப்பனை மிகவும் பிரகாசமானதாக மேற்கொள்ளப்பட்டது. உரோம, மத்தியகால நாடகங்களில் ஒப்பனை அலங்காரமானதாகவும், ஆடம்பரமானதாகவும் விளங்கியது.
எலிசபத்தியன் காலத்தில் ஒப்பனை தொழில் முறை சார்ந்ததாக வளர்ச்சியடைந்தது. இன்று ஒப்பனை ஒரு தனித்துறையாக வளர்ச்சியடைந்ததில் எலிசபெத்தியன் காலத்திற்கும் கணிசமான பங்குண்டு. கீழைத்தேய அரங்குகளில் குறிப்பாக ஆசிய நாடுகளில் பாரம்பரிய அரங்குகளில் ஒப்பனைக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. வர்ணமயமான ஒப்பனை இவ்வரங்கின் நடிகர்களுக்கு மேற்கொள்ளப் படுகின்றது. குறிப்பாக இங்கு முக ஒப்பனையில் பாத்திரத்தின் முக்கியத்துவம் வெளிப்படுமாறு வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டன. சீனா – ஒபேராஜப்பான் – நோ, கபுக்கிஇந்தியா – கதகளி, யக்ஷகானம், தெருக்கூத்து, ஒட்டந்துள்ளல்இலங்கை – வடமோடி, தென்மோடி, விலாசம், காத்தான் கூத்து போன்ற பாரம்பரிய அரங்குகளில் மோடிப்படுத்தப்பட்ட முறையிலும், பிரமாண்டமாகவும் ஒப்பனை செய்து கொள்ளப்படுகிறது.
பாத்திரங்களின் குறியீட்டுத் தன்மை வெளிப்படுத்தப்படும் வகையில் கடுமையான பல வர்ணங்கள் தடிப்பாக முகத்தில் பூசப்படுகின்றன. பச்சை : தேவர், இந்திரன் போன்ற பாத்திரங்களுக்கும் சிவப்பு: துச்சாதனன் போன்ற பாத்திரங்களுக்கும் வெள்ளை: அனுமன், சுக்ரீவன் போன்ற பாத்திரங்களுக்கும் பொதுவாக பாரம்பரிய அரங்குகளில் குறியீட்டுத் தன்மையுடன் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டியசாஸ்திரத்திலும் ஆஹார்ய அபிநயம் பற்றிப் பேசும் போது ஒப்பனை பற்றிய விளக்கத்தையும் தெளிவையும் பரதர் தருகின்றார். ‘ஒப்பனை மேற்கொள்ளும் நடிகன் தான் பிறிதொரு பிறவி எடுப்பவனாகவே அமைவான்’ இன்றைய நவீன யுகத்தில் நவீன அரங்கில் ஒப்பனை தொழினுட்ப ரீதியாகவும் தொழில் சார்ந்ததாகவும் தனியொரு துறையாகவும் வளர்ச்சியடைந்துள்ளமைக்கு ஒப்பனையின் இன்றியமையாத் தன்மையே காரணமாகும்.
இனி நவீன ஒப்பனை பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ஒப்பனையில் நிறங்கள் பற்றிய தெளிவு முக்கியமாகும். நீலம், சிவப்பு, மஞ்சள் என்பன அடிப்படை வர்ணங்களாகவும் அவற்றைக் கலப்பதனால் உருவாவது 2ம் நிலை வர்ணங்களாகவும் கருதப்படுகின்றது. இவ்வர்ணங்கள் அதன் தன்மைக்கேற்ப வெப்ப வர்ணங்கள் – Warm colours குளிர் வரணங்கள் – Cool colours எனப் பிரிக்க முடியும். வர்ணங்களில் கறுப்பு மிகவும் ஆபத்தான நிறமாகும். இதனைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். கன்னக் குழியில் படிப்படியாக கருவர்ணம் சேர்க்கும் பொது முகம் ஒடுங்கியதாகவும் வயதானதாகவும், மென் வர்ணம் பாவிக்கும் போது இளமைத் தோற்றத்துடனும் தென்படும். ஒப்பனை பொதுவாக மூன்று வகைப்படும்.
1. நேரடி ஒப்பனை (Straight Make up)
நேரடி ஒப்பனை எனும் போது பொதுவாக நாடகக் கலைஞர் எல்லோருக்கும் செய்யும் ஒப்பனை ஆகும். இதில் பின்வரும் அம்சங்கள் அடங்கும்.அடிப்படை வர்ணம் பூசுதல் – நடிகர்களின் நிறத்திற்கு ஏற்ப இது தெரிவு செய்யப்படும். பொதுவாக அடிப்படை வர்ணங்களில் 26 – 32 ஆகிய இலக்கங்கள் பயன்பாட்டிலுள்ளன. இவை வரடிநஇ ளவiஉம ஆகிய வடிவங்களில் காணப்படும். ‘ஓப்பனையை அழியாமல் பாதுகாப்பதற்கு முதலில் பயன்படுத்தப்படும் அடித்தளம் போன்றது அடிப்பூச்சு: ஒப்பனை ஒளியமைப்புடன் இணைந்து செல்லத் துணை நிற்கும்’. அடிப்படை வர்ணம் பூசும் போது அப்படியே முழுமையாகப் பூசக்கூடாது. முகத்தில் அடிப்படை வர்ணத்தைப் புள்ளி புள்ளியாக வைத்து பின் பூச வேண்டும். எண்ணைத் தன்மையான இந்த வர்ணப் பூச்சுக்கள் சில இடங்களில் அதிகமானால் கழுவாமல் துணி கொண்டு துடைக்க வேண்டும். ஒவ்வொன்றும் பூசிய பின்னர் கையைத் துடைத்துக் கழுவிய பின்னரே மற்றயதைப் பூச வேண்டும். இவ்வர்ணத்தைப் பூசும் போது பெருவிரலால் கீழிருந்து மேல் நோக்கிப் பூசுதல் வேண்டும். சில வேளைகளில் இவ்வர்ணப் பூச்சுக்கள் சிலருக்குப் பொருந்தாமல் இருக்கலாம். அதனால் முதலில் கைகளில் பரீட்சித்துப் பார்த்த பின்னரே பூசுதல் வேண்டும்.
நிரற்படுத்தல் (shading) – முகத்திற்கான ஒப்பனையில் நிரவுவதற்கான வர்ணமாக பெரும்பாலும் சிவப்பு வர்ணமே பாவிக்கப்படுகின்றது. இது தவிர மஞ்சள், கபிலம் போன்ற வர்ணங்களும் பாவிக்கப்படுகின்றன. இவ்வர்ணங்களை நிரவும் போது அடிப்படை வர்ணப்பூச்சு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டதோ அவ்வாறே செய்தல் வேண்டும். குறிப்பாக நிரற்படுத்தத் தேவையான இடங்களுக்கே இது மேற்கொள்ளப்டும்.Theatre powder – இது இல்லாவிட்டால் Face powder கூடப்பாவிக்கலாம். ஆனால் சாதாரண பவுடர் பாவிக்கக் கூடாது. Sponch ல் இதனை நனைத்து பிழிந்தெடுத்த பின் முகத்தை துடைக்க வேண்டும்.Pan cake – முகத்தின் வண்ணத்திற்கு ஏற்றவாறு Pan cake ஐ பயன்படுத்த வேண்டும். அவசரமான ஒப்பனைக்கு இதனை மட்டும் கூட பயன்படுத்த முடியும். எல்லாப் பாத்திரங்களுக்கும் இது பயன்படுத்தத் தேவையில்லை.கண் இமை, புருவம் இடல் – கண் இமையை சுத்தப்படுத்திய பின்பே மையிடுதல் வேண்டும். பெண்களுக்கு இது கட்டாயம் இடுதல் வேண்டும். ஆண்களுக்குச் சாதுவாகப் பூசினால் போதுமானது. இறுதியாக பொருத்தமான உதட்டுச் சாயம் பூசுதல் வேண்டும். உதட்டின் வெளிக் கோடுகளுக்கு Lip liner பாவிக்கலாம்.
2. சிறப்பான ஒப்பனை – Special Makeup
சிறப்பான ஒப்பனை எனும் போது பல் உடைந்தது போல், காயம் பட்டது போல். கண் குருடானது போல் காட்டப்பயன்படுகிறது. இவை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது எனப் பார்ப்போம்.
• பல் உடைந்தது போல் காட்டல் – பல்லை ஈரமில்லாமல் துடைத்த பின் spirit gum ஐப் பூசி கறுப்பு நிறமான நனையாத ஏதாவது ஒன்றை ஒட்டலாம். அல்லது spirit gum மேல் Black eyebrow ஐ பூச வேண்டும்.
• தாடி மீசை அமைத்தல் – தேவையான வர்ணத்திற்கு Grape hair வாங்கி, சுருளாக இருக்கும் இதனை தண்ணீரில் நனைத்து துண்டு துண்டாக வெட்ட வேண்டும். வெட்டப்பட் துண்டுகள் காய்ந்த பின் சீப்பினால் சீவிக் கொள்ள வேண்டும். பின் மீசை, தாடி ஒட்ட வேண்டிய இடத்தில் வெளிக் கோடுகளை வரைந்து அதன் மேல் spirit gum பூசி அதன் மேல் கீழிருந்து மேல் நோக்கி ஒட்ட வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணி மூலம் அழுத்தி தேவையற்ற spirit gum ஐ எடுக்க வேண்டும். அதே நேரம் வெளியே நீட்டியிருக்கும் பகுதியை Trim பண்ண வேண்டும்.•
கண்ணைக் குருடாக மாற்றுதல் – வெள்ளைத் துணியில் கண் அளவை வரைந்து வெட்டி ளிசைவை பரஅ பூசி ஒட்டி விட வேண்டும். இதன் மேல் முகத்தின் நிறத்தில் Pancake பூசல் வேண்டும்.
• ‘வெட்டுக் காயத்தை உண்டாக்க – அடித்தள ஒப்பனைக்குப் பின் முதலில் சிவப்புப் பென்சிலால் காயத்தை வரைய வேண்டும். நேர் கோடாக வரைதல் கூடாது. சிறிதே நெளிவு சுளிவுகளுடனிருக்க வேண்டும். புண்ணாக இருந்து குருதி வடியுமாறு செய்ய நெக்ஸ்டல் குருதி (Nextal Blood) அல்லது சிவப்பு மையைச் சிறிது ஒழுக விடலாம்.
• மூக்கை விகாரப்படுத்தல் – சிறு பிள்ளைகளின் சூப்பியை எடுத்து வெட்டி மூக்கில் ஒட்டுதல் வேண்டும். இவ்வாறே காதுக்கு பலூன் பாவிக்கப்படும். மூக்கை கூராகக் காட்ட முனைப்பகுதியில் ping colour pancake ஐயும் விளிம்பில் கருமை வர்ணமும் பூசுதல் வேண்டும். கண் உள்ளே சென்றது போல் காட்ட இமையை வழித்து பின் இமையை சற்றுக் கீழே வரைய வேண்டும்.- Sprit gum ஐ கழற்ற தேங்காய் எண்ணையை பாவிக்கலாம்.
• வயதான தோற்றத்தைக் கொண்டு வர, ஒப்பனை செய்யப்படுபவரை முகத்தை சுருங்கச் சொல்லி சுருக்கம் வருகின்ற இடங்களில் அடையாளம் இடுதல் வேண்டும். அடையாளமிடப்பட்ட இடங்களில் eye bro pencil ஆல் வரைய வேண்டும். பின் கண்ணின் கீழ் கறுப்பு shading கொடுத்தல் வேண்டும். மூக்கின் நடுவிலும் இரு பக்கங்களிலும் கறுப்புக் கோடு வரைதல் வேண்டும். உதட்டின் அடி, நாடிப் பகுதிகளிலும் இவ்வாறு கோடு இடுதல் வேண்டும். கன்னத்தின் நடுப்பகுதியில் shading செய்ய வேண்டும். வயதைக் காட்ட சிவப்பு lip stick ல் சிறிது கறுப்பைக் கலந்து பூசுதல் வேண்டும். தலைக்கு சாதுவாக அடிப்படை வர்ணம் போட்டு பின் zing oxide ஐ பூச வேண்டும்.
3. பாத்திரப் பண்பைக் காட்டும் ஒப்பனை – corrector makeup
இவ் ஒப்பனையில் வர்ணங்கள் மூலமே இத்தன்மை வெளிப்படுத்தப்படுகின்றது. மரபுவழி அரங்குகளில் இதற்கான மாதிரிகளைக் காணலாம். கிருஷ்ணருக்கு கரு நீலமும், அர்ச்சுனனுக்கு வெளிர் நீலமும், வீமனுக்கு பச்சை நிறமும், துரியோதனனுக்கு சிவப்பு நிறமும், தர்மருக்கு செம்மஞ்கள் நிறமும், திரௌபதிக்கு இளஞ்சிவப்பு நிறமும் பயன்படுத்துவது அப்பாத்திரங்களின் பண்பை வர்ணங்களின் மூலம் வெளிக் காட்டுவதாகும். கதகளி, யக்ஷகானம், தெருக்கூத்து போன்ற பாரம்பரிய அரங்குகள் எல்லாம் இந்த பாத்திர ஒப்பனையை வேண்டி நிற்கின்றன.
ஒப்பனையின் போது கவனிக்க வேண்டியவைகள் ஒப்பனை செய்பவருடைய முகம் சுத்தமாக எண்ணைத்தன்மை இல்லாது கழுவப்படல் வேண்டும். ஒப்பனை செய்பவரும் கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். ஒப்பனை செய்பவர் ஒப்பனைக்குரிய எல்லாப் பொருட்களும் இருக்கின்றதா எனச் சரி பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.ஒப்பனை செய்கின்ற பொழுது அதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதாவது ஆரவாரமில்லாமல் அமைதியான முறையில் அவர்களுக்குரிய பாத்திர நினைவுகளுடன் ஒன்றித்திருப்பதற்குரிய மன நிலையை வழங்குதல் வேண்டும். நடிகர்கள் எப்பொழுதும் கதிரையில் இருத்தி வைக்கப்பட்டே ஒப்பனை செய்யப்படல் வேண்டும். முகத்திற்கான ஒப்பனை செய்யுமுன் தலையை நன்கு சீவி ஒழுங்காக கட்டுதல் வேண்டும். ஒப்பனையின் போது உரிய பொருட்களையே பாவித்தல் வேண்டும்.
ஒப்பனையின் முக்கியத்துவம்
- • நடிகனுக்கு நடிப்புக்கான மனநிலையினை வழங்குதல்
- • முகத்தை பிரகாசமாகக் காட்டுதல்
- • நிஜத்தை விட பெரிதுபடுத்திக் காட்டல்
- • வகைமாதிரிப் பாத்திரங்களை உருவாக்க உதவும்.
- • குறியீட்டுப் பாத்திரங்களைப் படைக்க உதவும்.
- • அசாதாரண தன்மைகளை ஏற்படுத்துதல் (குருடு, விகாரம், காயம்)
- • முகத்தின் தன்மையை மாற்ற உதவும் (இளமை, முதுமை, தாடி, மீசை)
ஒப்பனை மேற்கொள்ளும் நடிகன்,தான் பிறிதொரு பிறவி எடுக்கின்றான். அப்பாத்திரமாக மாறுவதற்கான மனநிலையையும் பெறுகின்றான். ஒப்பனையானது இன்றைய நாடகங்களைப் பொறுத்த வரையில் மிகச் சிறப்பாக நாடகத் தன்மை, பாத்திரம், புவியியல் சமூகப் பின்னணி, வயது, உணர்வு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நடிகர்களுக்கு இடப்படுகின்றது. இது நாடகங்களின் கலைப் பெறுமானத்தினை அதிகரிப்பதோடு நடிப்போருக்கும் பார்ப்போருக்கும் இடையில் மிகச் சிறந்த தொடர்பாடல் தன்மையினையும் ஏற்படுத்துகின்றது. எனவே பாரம்பரிய அரங்கு மீளுருவாக்கம் பற்றிய கொள்கைகளில் ஆடல், பாடல், ஆற்றுகை முறைமை, உடையமைப்பு, மேடையமைப்பு, எண்ணக்கரு போன்றனவற்றின் மீளுருவாக்கம் போல் ஒப்பனையின் இடமும் முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. இது பாரம்பரிய அரங்கின் கலைச் செழுமைக்கும் அதன் நிலைத்து நிற்றலுக்கும் மேலும் வலுச் சேர்க்கும்.
இந்த இடத்தில் இந்திய பாரம்பரிய அரங்குகள் சிலவற்றின் ஒப்பனை முறைகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.கதகளியில் ஒப்பனை கதகளி என்றாலே பிரமாண்டமான ஒப்பனையே முன்னிற்கின்றது. கதகளிக்கு ஒப்பனை செய்து முடிக்க ஒருவருக்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் எடுக்கின்றன. பச்சை, கத்தி, கரி(ஆண்கரி, பெண்கரி), தாடி(வெள்ளை, சிவப்பு, கறுப்பு), மினுக்கு என்றவாறு ஒப்பனை இங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது. பச்சை ஒப்பனையானது மேல் நோக்கி வளைவாக வரையப்படும் புருவங்கள் மூலம் துல்லியமான நெளிவு சுளிவுகளைக் கூட முகத்தில் தோற்றுவிக்க ஏதுவானதாக அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக இவ் ஒப்பனை சாத்வீக பண்புள்ளள பாத்திரங்களுக்கு இடப்படுகின்றது. ‘பச்சை – தேவர் இந்திரன் போன்ற பாத்திரங்கள் பச்சை வகுப்புக்குரியவை’6 கத்தி என்பது நெற்றியில் புருவத்திற்கு மேலாக கத்தி போன்று வரையப்படும் அமைப்பாகும். ‘இராவணன், கம்சன், சிசுபாலன் ஆகிய அரக்க அசுரப் பாத்திரங்களை இது குறிக்கும் ‘ தாடி என்பது குரூரமான மற்றும் அநாகரிகத் தன்மை கொண்ட பாத்திரங்களுக்காக இடப்படுவதாகும். மினுக்கு என்பது பெண் பாத்திரங்களுக்காக இடப்படுவதாகும். இருஷிகள்,பிராமணர்கள், அரக்கிகள் அல்லாத ஏனைய பெண்கள் ஆகியோரைக் குறிக்க இவ்வகை வேசம் அமைக்கப்படும்.
‘.தெருக்கூத்தில் ஒப்பனை தெருக்கூத்து ஒப்பனையானது பெரும்பாலும் குறியீட்டுப் பாணியிலமைந்ததாக இருக்கும். குறிப்பிட்ட வண்ணமானது குறிப்பட்ட பாத்திரத்திரத்திற்கு வரையறை செய்யப்பட்டிருக்கும். இதே போல் அடிப்பூச்சும் வெவ்வேறாகவிருக்கும். துரியோதனன் – சிவப்பு துச்சாதனன், கீசகன் – சுத்த மஞ்சள், ஆழ்ந்த கடும் சிவப்பு வீமன் – கடும் பச்சை பெண் பாத்திரங்கள் – இளம் சிவப்பு இராமன், இலட்சுமணன், அர்ச்சுனன் – பச்சைபோன்றவற்றினை இதற்கு உதாரணங்களாகக் கூறமுடியும்.’வர்ணங்கள் பார்ப்போரிடம் உணர்வு மாற்றங்களைத் தரும். சிவப்பு – எழுச்சி, வீர்மஞ்சள் – மங்கலம், மகிழ்ச்சிநீலம் – அமைதி, தானம்பச்சை – பசுமை, வளம்கறுப்பு – கொடுரம், துக்கம்வெள்ளை – சமாதானம்சிவப்பு, கறப்பு, காவி, வெண்மை – பக்தி’ தெருக்கூத்தில் ஒப்பனையானது, வர்ணங்களாக மட்டுமன்றி கோடுகளாகவும் வடிவங்களாகவும் வரையப்படுகின்றன. கொடிய பாத்திரங்களெனின் கறுப்பு, சிவப்புக் கோடுகள் முகத்தில் அதிகமாகக் காணப்படும். அத்துடன் நாடியில் தேனடை போன்ற வடிவமும் வரையப்படும். அற நிலைப் பாத்திங்களெனின் நெற்றியில் திருநீறு அல்லது நாமக் கோடு வரையப்பட்டு புருவங்கள் ஒன்றையொன்று இணையாது, கண்பகுதிகளிலும், மூக்கின் இரு முனைகளிலும் நாடியிலும் பொட்டுக்கள் வரையப்பட்டிருக்கும்.யக்ஷகானத்தில் ஒப்பனை யக்ஷகானம் என்பது ஆடல், பாடல், ஒப்பனை என்பவற்றின் கூட்டுக் கலைவடிவமாகும். அதாவது யக்ஷகான நடிப்போடு ஒப்பனை மிகுந்த செல்வாக்கினைச் செலுத்துகின்றது. இங்கு வடிவங்களைவிட கறுப்பு, சிவப்பு, வெள்ளை, பச்சை வர்ணங்களினாலான கோடுகளைக் கொண்டே பாத்திரங்கள் வரையறை செய்யப்படுகின்றன.
அநேகமாக யக்ஷகானத்தில் வீரம், கோபம் போன்ற ரசங்களே முன்னிற்பதால் சிவந்த கண்கள் இவர்களது ஆற்றுகைக்குப் பெரும் பங்காற்றுகின்றது. இதற்காக மங்கலான சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகின்றது. யக்ஷகானத்தில் முக்கியமான விடயம் யாதெனில் கறுப்பு கம்பளியிலான அல்லது கறுப்பு வண்ணத்தனாலான மீசையாகும். பாத்திரங்களுக்கேற்ப மீசையும் வரையறுக்கப்பட்டடிருக்கும். கொடிய குணமுடைய பாத்திரங்கள் மிகப்பெரிய மீசையையும் சாத்வீக குணமுடைய பாத்திரங்கள் சாதாரண அளவான மீசையையும் இளவயதுப் பாத்திரங்கள் மிகச் சிறிய மெல்லிய மீசையையும் வைத்துக் கொள்வர்.
ஒட்டந்துள்ளலில் ஒப்பனை ஒட்டந்துள்ளலில் ஒப்பனையானது தெருக்கூத்து, யக்ஷகானம் போன்றமையாது. தனியாள் ஆற்றுகையாக இருக்கின்ற காரணத்தினால் பாத்திர வெளிப்பாட்டிற்கான ஒப்பனை என்பதனை விடுத்து அலங்காரத் தன்மையான ஒப்பனையே இடப்படுகின்றது. இங்கு பச்சை வர்ண ஒப்னையே பிரதானமாக இடப்படுகின்றது. வெள்ளை நிற எல்லைக் கோடு முகத்திற்கு இடப்பட்டு முகம் முழுவதும் பச்சை வர்ணம் பூசப்படும். கண்களின் மூலமும் இங்கு நடிப்பு வெளிப்படுத்தப்படுவதால் கண்களின் கீழ்ப்புறமும் புருவங்களிலும் தடிப்பாக வர்ணங்கள் இடப்படுகின்றன. யக்ஷகானத்தைப் போல் கண்களின் சிவப்பு நிறத் தன்மையாது கூடியாட்டத்திற்கு வேண்டப்படுகின்றது. இதற்காக சுண்டப்பூ எனப்படும் மகரந்தத்தை எடுத்து அதனைக் காய வைத்து பின் தண்ணீரினுள் ஊற வைத்து அதனைக் கண்களுக்குள் விடுவர். இதனால் கண்கள் பிரகாசமான சிவப்பு நிறமாக மாறும்.
மரபுவழி வடமோடி, தென்மோடிக் கூத்துக்களில் ஒப்பனை மரபு வழிக் கூத்துக்களில் ஆடை தவிர்ந்த ஏனைய இடங்களில் முத்து வெள்ளை, சிவப்பு, மஞ்சள், நீலம், கறுப்பு முதலான பவுடர்களை ஆமணக்கு எண்ணையில் குழைத்துப் பூசினர். முத்து வெள்ளையையும் குங்குமத்தையும் கலந்தால் வரும் றோசா நிறத்தை ஆமணக்கு எண்ணையில் கலந்து பூசும் வழக்கமுண்டு’. முத்து வெள்ளையாது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திய சந்தர்ப்பங்களுமுண்டு. பொதுவாக வடமோடி, தென்மோடிக் கூத்துக்களில் ஒப்பனையானது இன்றளவில் இரண்டுக்கும் ஒரே தன்மையாகவே இடப்படுகின்றது.
முடிவுரை
ஒப்பனையாது இன்று பெரியதொரு துறையாக வளர்ச்சி கண்டிருக்கிறது. மற்றும் பல்வேறு பாரம்பரிய அரங்குகளும் ஒப்பனையின் தன்மைகளைப் புரிந்து கொண்டு பாத்திரத்திற்கும் வர்ணத்திற்குமான ஒத்திசைவுத் தன்மைகளுடன் குறியீட்டுப் பாங்கான ஒப்பனை வரை இன்று முன்னேற்றம் கண்டுள்ளது. ஓப்பனையின் வரலாற்றினைப் பாரக்கும் போது அதற்கும் ஓர் மாற்ற வரலாறு உண்டு. சூழ்நிலைகளுக்கேற்பவும் தேவைகளக்கேற்பவும் கிடைக்கும் வசதிகளிற்கேற்பவும் இது மாறியிருக்கின்றது. இதுதான் இயங்கியலின் தன்மைகளும் கூட. பாரம்பரிய கூத்துக்களில் பொதுவாக ஒப்பனையை வைத்துக் கொண்டும் வடமோடியா தென்மோடியா என்பதை வரையறுப்பதற்கான சாத்தியப்பாடுகளை மனங்கொண்டு சரியான முறையில் ஒப்பனையினை மேற்கொள்வதன் மூலம் ஏற்படுத்த முடியும். ஆரம்பத்தில் இவ்வாறிருந்தமைக்கான சான்றுகள் உண்டு.
ஆனால் தற்பொழுது இரு வகைக் கூத்துக்களுக்கும் ஒரே வகையான ஒப்பனையே போடப்படுவது இங்கு கவனிக்க வேண்டியதாகும். சரியான முறையில் நாம் தொன்மங்களைத் தேடி தற்கால நவீன ஒப்பனை முறைமைகளையும் கருத்தில் கொண்டு வடமோடி, தென்மோடிக் கூத்துக்களுக்கு வெவ்வேறு ஒப்பனைப் பாரம்பரியத்தினை உருவாக்குவதோடு ஒவ்வொரு பாத்திரத்திற்கும் நவீன அரங்கவியற் கூறுகளுக்கு ஒத்திசைவான தேவையேற்படின் குறியீட்டுப்பாங்குடன் கூடிய தனித்தன்மையான ஒப்பனை முறை அவசியமாகின்றது. கூத்தின் ஒப்னையானது, முகத்தில் சாயம் பூசுவது, என்பதில்லாமல், முகத்தில் கதா பாத்திரத்தின் குணாம்சங்களைக் குறியீட்டு மொழியில் புள்ளிகள், கோடுகள், வளைவுகளை வண்ணங்களின் இணைப்பில் எழுதுவது என்பதாகிறது. இதற்குக் கூத்தின் ஒயிலாக்கம் இடந்தந்துள்ள குறியீட்டு மொழியில் விளக்கி நிற்கும் இத்தன்மை, கூத்தர்களின் கற்பனை வெளிப்பாட்டை மட்டுமல்லாது, அதற்கேற்ற சூழலைத் தன் வயமாக்கிக் கொண்டிருந்த அக்கால மக்களின் தொழிநுட்ப வளத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆயின் இடை மரபின் ஒயிலாக்க நிகழ்வுகளில், ஆரோக்கியமான இக்குறியீட்டுத் தன்மை மாறி, எல்லோருக்கும் ஒரே வகைப் பூச்சு என்றாகி, ஒப்பனை எழுதுவது மாறி, ஒப்பனை போடுவது என்பதாகிவிட்டது. கற்பனை விரிவாக்கத்திற்கான வாய்ப்பை உருவாக்கித் தருவதையே கூத்து, தன் மரபாகக் கொண்டிருக்கிறது. இடை மரபில் விடுபட்டுப் போன இக் கற்பனை விரிவாக்க மரபைக் கைக்கொள்ள வேண்டிய பெரும் பணி நவீன நாடக முயற்சிகளுக்கு ஏற்பட்டுள்ளமையால் கூத்து நவீன நாடக முயற்சியாளர்களால் கவனத்திற்குரியதாகிறது.
உசாத்துணை1.உசாத்துணை1. அரசு.எஸ்.ரி., நாடகக் கலையும் ஒப்பனையும், திசை, 1990.2. இராமசாமி.மு, தெருக்கூத்து ஓர் நடிப்பு, ஜே.கே. பிரிண்டர்ஸ், சென்னை, 1999.3. சக்திப்பெருமாள், சறோஜா.வே, அரங்கவியல், காவியா பதிப்பகம், சென்னை, 2004.4. மௌனகுரு.சி., மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், 1993.5. மௌனகுரு.சி., சிவத்தம்பி.கா., திலகநாதன். கா., அரங்கு ஓர் அறிமுகம், உயர் கல்வி சேவை நிலையம், கொழும்பு, 2003.6. லீலாம்பிகை செல்வராஜா, தென்னாசிய சாஸ்திரிய நடனங்கள், மகாத்மா காந்தி அச்சகம், ஏழாலை, 1998.க.மோகனதாசன்விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம்