தெருக்கூத்து பயிற்சிப்பட்டறை

 

யாழ் அரங்கம் மற்றும் ஆய்வு நிறுவனம் ஒருங்கிணைக்கும் தெருக்கூத்து பயிற்சிப்பட்டறை – ஜனவரி, பிப்ரவரி- 2024
நண்பர்களே, கலை ஆர்வலர்களே, வணக்கம். ”யாழ் அரங்கம் மற்றும் ஆய்வு நிறுவனம்” புதுச்சேரியில் தொடர்ந்து நாடக நிகழ்வுகள், நாடக பயிற்சிகள், நாடகம் தொடர்பான ஆய்வுகள் என செயல்பட்டு வருவது தாங்கள் யாவரும் அறிந்ததே.
அவ்வகையில் தமிழ் நாடகக் கலையின் முன்னோடிக் கலையான தெருக்கூத்துக் கலையை, 10 நாட்கள் தொடர் பயிற்சிப் பட்டறை வழி இளம் தலைமுறையினருக்குக் கையளித்தல் மற்றும் நிகழ்த்துதல் எனும் திட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.
இதன் வழி பாரம்பரிய கலைஞர்களான தெருக்கூத்துக் கலைஞர்கள் நடிப்பு சார்ந்த நிறுவனங்களில் மற்றும் அவர்களாகவே கூத்துப் பள்ளி நிறுவி கற்பித்தல் எனும் தளத்திற்கும் பயணிக்கலாம்.
நடிப்பு மற்றும் நாடகம் சார்ந்து இயங்கும் இளம் தலைமுறையினர் இத்தெருக்கூத்துப் பயிற்சியின் வழி இசையுடனும் ஆடலுடனும் இணைந்த தமிழ் பண்பாட்டு நடிப்பு முறைகளுக்கு அனுபவம் பெற்றவர்களாக மாற்றம் பெறுவார்கள். மேலும் தெருக்கூத்தின் வலிமையை அந்த வடிவத்திற்குத் தேவையான உழைப்பை உணர்ந்தவர்களாக மாற்றம் பெறுவார்கள். குறிப்பாக தன் நட்பு வட்டாரங்களில் தெருக்கூத்தின் பெருமையைப் பற்றி பேசத் தொடங்குவார்கள். தெருக்கூத்திற்கான பார்வையாளர்கள் பன் மடங்கு அதிகம் ஆவார்கள்.
இந்த பயிற்சிப் பட்டறையை பங்கேற்பாளர்கள் தங்களால் இயன்ற அளவில் தரும் நன்கொடை மற்றும் நண்பர்கள் செய்யும் உதவி கொண்டு நடத்தும் திட்டம் இருக்கிறது. ஏனெனில் பெருளாதார சிக்கலை முன் வைத்து விளிம்புநிலை மாணவர்கள் இதில் ஈடுபடாமல் விடுபட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
கூத்துப் பயிற்சி ஆசிரியர்கள்
திரு ஏ. செந்தில்
திரு ஏ. கோவிந்தராஜ்
ஸ்ரீ செந்தில்குமரன் நாடக சபா, கரசானூர்
திரு அவினாஷ் சந்தோஷ்
ஸ்ரீ மயிலம் முருகன் நாடக சபை மற்றும் தெருக்கூத்து பயிற்சிப் பள்ளி.
பயிற்சி பட்டறை வழிகாட்டல்
மு. ஆதிராமன், மாநிலத் தலைவர், I.P.T.A, புதுவை.
பயிற்சிப்பட்டறை இயக்குநர்
முனைவர் ஞா. கோபி, யாழ் அரங்கம் மற்றும் ஆய்வு நிறுவனம்.