கழுமரம் – நாடக செயலாக்க அனுபவக் கட்டுரை
கழுமரம் – நாடக செயலாக்க அனுபவக் கட்டுரை.
இயற்கை வெற்றிடத்தை வெறுப்பது போல் மூலதனம் இலாபமின்மையை அல்லது குறைந்த இலாபத்தை வெறுக்கிறது. இலாபம் சரிவரக் கிடைப்பதைப் பொறுத்துதான் அது பலமடைகிறது. 10% இலாபம் நிச்சயம் என்றால் அது எல்லா இடத்திலும் வேலை செய்யும். 20% இலாபம் என்றால் சூடு பிடிக்கும். 50% இலாபம் என்றால் அதன் தைரியம் அளவுக்கு மீறி அதிகரிக்கும். 100% என்றால் மனித நியாயங்களை எல்லாம் காலில் போட்டு மிதிக்கும். 300% என்றால் கொலைபாதகத்திற்கும் அஞ்சாது-தூக்குக் கயிறை எதிர் கொள்ள வேண்டுமென்றாலும் கூட எதிர்கொள்ள வைக்கும். அப்படி மக்களை நசுக்கிக்கொண்டு தொழிலார்களின் உழைப்பில் கொழுத்து திரியும் கார்ப்பரேட் கூட்டு நிறுவனங்களும், அரசும் இயங்கிக் கொண்டிருக்கும் கட்டமைப்பில் மக்கள் தலையில் தினசரி ஒரு புது பிரச்சினையை வைத்து விட்டு கழுவில் ஏற்றும் அவலநிலையை நடிகர்களின் உணர்வு, உடல் அசைவு, ஒளி – ஒலியின் வாயிலாக பார்வையாளர்களுக்கு கடத்துவதே கழுமரம்.
பிரதி – வடிவமைப்பு
ஞா.கோபி அண்ணன் அவர்கள்.
ஆறு வருடங்களுக்கு முன்பு கழுமரம் நாடகமானது உருவாக்கப்பட்டது.
நான் முழுநேரமாக நாடகத்தில் இயங்க முடிவெடுத்து இயங்கிக்கொண்டிருந்த நேரமது. கோபி அண்ணன் அவர்கள் facebook-யில் நடிகர்கள் தேவை என்று பதிவு செய்திருந்தார். நான் அதை பார்த்த மறுகணமே அவரை தொடர்புக் கொண்டேன். மறுநாளே கிளம்பிவருமாறு கூறினார். அப்படியே கிளம்பி சென்று விட்டேன். புதுச்சேரிக்கு வருவது அது தான் முதல் முறை. மீண்டும் அறிமுகப்படுத்தி பேசிக்கொண்டோம். அன்றைய நாளில் இருந்து சின்ன சின்ன அசைவுகளை செய்ய வைத்தார். உடலை எப்படி எல்லாம் பயன்படுத்தி ஒரு விடயத்தை விளங்க வைக்க முடியும் என்று ஆய்வு செய்ய தொடங்கினோம். மறுநாளே பிரதியை தயார் செய்து எங்களுக்கு அளித்தார். அதை அவரை தவிர வேறு யாராலும் காட்சிப்படுத்த முடியாது. அப்படியான எழுத்து வடிவம் அந்த பிரதியில் இருந்தது. அவரின் எழுத்துகளை எடுத்து கொண்டோம். அதை உடலில் வெளிப்படுத்த எந்த அளவுக்கு சாத்திய கூறுகள் இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய தொடங்கினோம். நாற்காலியை வைத்து அதன் மூலம் கூற விழைகிற செய்தியை உடலும் நாற்காலியாகவும் ஒன்றிணைத்து நடிகர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பின்பு பாக்கு தட்டை தலையில் ஏற்றி தட்டு விழாமல் உடலை வளைத்து நெளித்து ஊர்ந்து காட்சிகளை உருவாக தொடங்கினோம். அவர் எங்களை வழிநடத்துவார். புது புது திட்டங்களை செயல்படுத்தி காட்சிகளாக மாற்ற தொடங்கினார். உடல் அசைவுகளை பற்றி தினசரி உரையாடல்கள் நிகழ்ந்தது. எனக்கு புதுவித படிப்பினை கிடைத்தது. என் உடலை புரிந்துக்கொள்ள தொடங்கினேன். எங்கே எல்லாம் வலி ஏற்படுகிறது என்பதை உணர தொடங்கினேன். அதற்கு தனியாக உடல் பயிற்சி செய்ய தொடங்கினேன். உடல் பருமன் அதிகமாக இருந்த காலம். சின்ன சின்ன அசைவுகளுக்கே தசைப்பிடிப்பு ஏற்பட்டு விடும். மிகுந்த சிரமத்தை சந்தித்தேன். உடனிருந்த பிரபேந்திரன் அண்ணன் உடல்பயிற்சி கொடுக்க தொடங்கினார். என் உடலை நன்றாக பயன்படுத்த பெரும் உதவியாக இருந்தார். தினசரி காலையில் உடற்பயிற்சி நிகழும். அனைத்து நடிகர்களுக்கும் இது போல ஒவ்வொரு அனுபவம் உடலின் வாயிலாக கிடைத்தது.
உடலின் மீதான ஆய்வுக்கு பிறகு காட்சிகளை வடிவமைக்கத் தொடங்கினார் கோபி அண்ணன். ஒவ்வொரு அசைவுக்குள் இருக்கும் அரசியலை எங்களுடன் பகிர்ந்து கொள்வார். அதிகாரம் என்னவெல்லாம் செய்யும் மக்களை கூண்டுக்குள்ளே மீண்டும் மீண்டும் இயங்க வைக்கும் அங்கிருந்து காட்சி உருவாக்க தொடங்கியது. அப்போது ஒத்திகைக்கு மிக சிறிய இடமே இருந்தது. ஒரே காட்சியை வலம், இடம், மையம், மேல், கீழ் என்று துண்டுகளாக வெட்டி தான் பணி செய்தோம். சில நாட்கள் புதுசேரி கடற்கரையில் பயிற்சி செய்வோம். (இது குறித்து தனி பதிவே செய்ய வேண்டும்.) இப்படியாக ஒவ்வொரு காட்சியாக உருவாக தொடங்கியது. நடிகர்களின் உடல் அசைவின் மூலமே காட்சிக்களை அவர் வடிவமைக்க தொடங்கினார். ஒத்திகைக்கு இடைவெளியில் டீ அறுந்திக்கொண்டு அவரின் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வார். நாங்களும் எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம். இப்படியான உரையாடல்கள் மேமேலும் இயங்க உதவியது.
நாடகத்திற்கு தேவையான property குறித்து பேச தொடங்கினோம். கூண்டு ஒன்று தயார் செய்ய வேண்டி இருந்தது. அதை தனுஷ் அண்ணன் அவர்கள் தயார் செய்தார். முதலில் கூண்டில் வெட்டப்பட்டு இருந்தது மூன்று தலைகள் அப்படியாக தான் இருந்தது. பின்பு இரண்டு என்று ஆனது. அக்கூண்டு பல பரிமானகளை பெற்று தற்போது உள்ள நிலையை அடைந்து இருக்கிறது. சீட்டுக்கட்டை வைத்து சாட்டை ஒன்றை தயார் செய்தோம். இது போல நிறைய பொருள்கள் உருவாக தொடங்கியது. முக்கியமாக வளையை குறிப்பிட வேண்டும். 2 நாட்களாக தயார் செய்தோம். அதன் ஒவ்வொரு பின்னலிலும் ஒவ்வொரு கதைகள் அடங்கி இருக்கிறது. அத்துணை விஷயங்களை பகிர்ந்து கொண்டே தான் பணி செய்தோம். பறவைகளாக மாறிய நடிகர்களுக்கு இறகு தயார் செய்தோம். கையும் காலும் rubber band மூலம் இணைக்கபட்டிருக்கும் அதன் கை பகுதியில் சிறகுகள் இருக்கும். அதை அந்த அந்த நடிகர்களே உருவாக்கினர். அப்படியான அனுபவத்தை தான் அவர் எங்களுக்கு வழங்கினார். மற்ற பொருட்களை தனுஷ் அண்ணன் அவர்கள் தயார் செய்து கொடுத்தார்.
பின்பு நாடகம் முழுவதுமாக தயார் ஆன பிறகு அரங்கேற்றத்திற்கு தேதி உறுதி செய்யப்பட்டது. ஆரோவிலில் உள்ள களரிகிராமத்தில்
21 – 10 – 2018 (ஞாயிறுக்கிழமை) மாலை 06.30 மணி என்று உறுதி ஆனது அது ஒரு திறந்த வெளி அரங்கம். ஆனால் குறிப்பிட்ட தேதி அன்று புதுச்சேரி முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. அரங்கம் முழுவதும் தண்ணீர் எவ்வளவு முயற்சி செய்தும் அதை சரி செய்ய முடியவில்லை. அதனால் அரங்கேற்றம் ரத்து செய்யப்பட்டது. அதை கனத்த மனதுடன் அனைவரும் தெரியப்படுத்தினோம். சிறு இடைவெளி ஏற்பட்டது.
மீண்டும் 04 -11 -2018 என்று அதே இடத்தில் அரங்கேற்றம் செய்யலாம் என்று உறுதிச் செய்யப்பட்டது. குறித்த நாளில் அரங்கேற்றம் நிகழ்ந்தது.
பின்னணி இசை நேரடியாக வாசிக்கப்பட்டது. சுரேந்திரன் அண்ணனும் அவரது நண்பரும் சேர்ந்து இசைத்தார்கள். வயலின் keyborad, rhythm bard ஆகிய இசை கருவிகளை வைத்து பின்னணி இசை அமைக்கப்பட்டது. நாடகம் நிறைவு பெற்றாலும் அந்த இசை உங்கள் செவிகளில் கேட்டுக்கொண்டே இருக்கும். நம்மை காட்சிகளுக்குள்ளையே கிடத்திவிடும். அப்படியான இசை அமைக்கபட்டிருந்தது.
ஒளி அமைப்பு செய்தவர் சுதன் அண்ணன். வண்ணங்களில் காட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று விடுவார். ஒவ்வொரு ஒளி வண்ணத்திற்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உண்டு அதை காட்சியுடன் பொருத்தி பார்க்கையில் வெவ்வேறு விதமான ஆழமான செய்தியை பார்வையாளர்களுக்கு கடத்தும் அன்றைக்கும் சுதன் அண்ணன் ஒளியின் வண்ணங்களில் வாயிலாக நடித்துக்கொண்டிருந்தார்.
பின்பு கழுமரம் நாடகம் பல்வேறு பரிமாணம் அடைந்து விட்டது. மைசூர், பாலக்காடு, சென்னை, புதுசேரி என நாடகம் பயணப்பட தொடங்கியது. ஆறு வருடங்களுக்கு முன்பு என் உடல் என் கட்டுப்பாட்டில் இருக்காது. மூளையில் ஒரு அசைவை அசைக்க நினைத்தால் உடல் அசையாது. ஆனால் இன்று அந்த தொந்தரவு இல்லாமல் நான் நினைத்த அசைவை செய்தேன். இன்னும் பல இடங்களுக்கு கழுமரம் செல்ல வேண்டும் என்பது என் விருப்பம். அதற்கான மேடைகள் மிக குறைவாகவே கிடைத்துள்ளது. சென்னையில் தம்மா நாடகவிழாவில் கிடைத்த மேடை போல இன்னும் மேடைகள் கிடைக்க வேண்டும். கழுமரம் நாடகத்திருக்குள் அத்துணை உழைப்பு அடங்கி இருக்கிறது. பல வலிகளை சுமந்து நடிப்பது போல ஒரு காட்சி அமைப்பு நாடகத்தில் இருக்கிறது. அது நாடக உருவாக்கத்திலும் இருக்கிறது. இந்த மேடைகள் கழுமரத்திற்கு போதாது இன்னும் செல்ல வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
(பா.பத்மநாபன் சாரதி)