கலாநிதி க. சிதம்பரநாதனின் தேடலும்-ஆய்வுகளும் -நாடகப் பயணங்களும் (பேராசிரியர் சி மௌனகுரு -இலங்கை)
சிதம்பரநாதன் நாடகத்தில் பட்ட மேற்படிப்பினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்கின்றார். அவரது ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரை“சமூக மாற்றத்திற்கான அரங்கு’ என்பதாகும்.தம் ஆய்வுக் கட்டுரையினை சமர்ப்பிக்கின்றார். இது நூலாக வெளி வருகின்றது. பிறகு முனைவர் பட்ட மாணவனாகப் பதிவு செய்கிறார். இதன் மேற்பார்வையாளர் பேராசிரியர் சிவத்தம்பி. சிரம்பரநாதன் தன் ஆய்வினை 2000 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கின்றார். இவ்வாய்வின் தலைப்பு சமூக நெருக்கடி நிலையில் அரங்கின் பரிமாணங்கள் என்பதாகும்.அரங்கியல் ஆய்வில் இவ்விரு ஆய்வுகளும் முக்கியமானவை. சமூக மாற்றம், சமூக நெருக்கடிகள் என்ற அவரது ஆய்வின் தலைப்புக்களில் அரங்கைச் சமூகப் பிரச்சினைகளுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற நோக்கமே மேலெழுகிறது. சமூகத்தினால் உருவாகும் அரங்கு சமூகத்தை உருவாக்கும் வல்லமையையும் கொண்டது.1980களுக்குப் பிறகு யாழ்ப்பாணச் சமூகம் எதிர்கொண்ட சவால்கள் அதிகம். இன அடக்குமுறை, இராணுவ-போலீஸ் அடக்கு முறை,ஆயுதப் போராட்டம், அகதி வாழ்க்கை, போருக்கு முகங் கொள்ளல், உயிர் தப்பிக்கச் செய்யும் முயற்சிகள், அடக்கு முறைக்கு எதிராகப் போராடல் எனப் பல்வேறு அனுபவங்களை யாழ்ப் பாணச் சமூகம் பெற்றது.யாழ்ப்பாணச் சமூகத்தில் நிலவிய சாதி அடிமை,பெண் அடிமை, சீதனம் என்பன கேள்விக்குள்ளாக்கப்பட்டன.யாழ்ப்பாணச் சமூகம் மாற வேண்டும் என்ற சிந்தனைகளும் எழுந்தன.இந்த மாற்றங்களை அரங்கு எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பது பற்றியே சிதம்பரநாதனின் ஆய்வுகள் அமைந்தன.
அரங்கு பற்றிய இச்சிந்தனைகள் எழுவதற்கான ஆய்வு நடைமுறை, பின்புலங்கள் ஏற்கெனவே யாழ்ப்பாணத்தில் உருவாகியிருந்தன.1983 இல் இனக் கலவரம் கொழும்பில் காத்திரமான நாடகப் பணியாற்றிய சிறந்த நாடகக்காரர்களை யாழ்ப்பாணத்திற்குக் கலைத்திருந்தது.1975இல் ஆரம்பிக்கப்பட்ட நாடகத்தில் கல்வி பட்டயப் (டிப்ளோமா) பயிற்சி நெறி, அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரங்கக் கல்லூரி,அதனைத் தொடர்ந்து 1970களில் பிற்பகுதியில் நாடக அரங்கியலும் உயர்தர வகுப்புகளுக்கு ஒரு பாடமானமை, 1980களின் ஆரம்பத்தில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகமும், அரங்கியலும் ஒரு பாட நெறியாகியமை,என்பன நாடக அரங்கியலை ஒரு வரன் முறையான பாடநெறியாக மாற்றி இருந்தன.இதனால் நாடகத்தில் ஈடுபாடுடை யோருக்கு உலக நாடக, ஆசிய நாடக வரலாற்றையும், அந்நாடகங் களின் தன்மைகளையும் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டதுடன் தமது நாடக மரபுகளை ஆழமாகக் கற்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. நாடக அரங்கக் கல்லூரி பலருக்கு நாடகப் பயிற்சிகளை வழங்கியது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இப்பணியைச் செய்தது.
இதன் மூலமாக பல நாடக எழுத்தாளர், நெறியாளர், நடிகர்கள், ஆய்வாளர்கள் மேற்கிளம்பினர்.அவர்களுள் ஒருவரே சிதம்பர நாதன்.ஆரம்பத்தில் நடிகராக பின்னர் நெறியாளராக, பின்னர் ஆய்வாளராக பின்னர் நாடகச் செயற்பாட்டாளராகப் (Activist) பரிணமித்தவர் சிதம்பரநாதன்.சிதம்பரநாதன் தனது பட்டப் படிப்பிற்கு விஞ்ஞான பாடத்தை மேற்கொண்டு நாடகத்தில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக நாடகத் துறைக்குள் வந்தார்.1980 களில் இருந்து யாழ்ப்பாண நாடக வரலாற்றில் ஏற்பட்ட புதிய போக்குகளால் உள்வாங்கப்பட்டு அதனூடாக முகிழ்த்தவர்.மெளனகுரு, தாசிசியஸ்,சண்முகலிங்கம் ஆகியோரின் பட்டறைகளுக்கூடாக வளர்ந்து பயிற்சி பெற்றவர்.தமிழ் தேசிய நாடக மரபொன்றை தேடும் முயற்சியும் கூத்துப் பாரம்பரிய நடனங்கள், இசைகள் என்பனவற்றை இணைத்தும் தமிழருக்கான பிரச்சினைகளை பேசும் தமிழர் அரங்கு ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டிருந்த காலம் இது. தமிழ் அரங்கு மாற வேண்டும் என்ற தேவை யாழ்ப்பாணத்தில் உணரப்படுகின்றது.அதற்கான காலமும் கணிகின்றது.கூத்துக்களை தனியாகவும், பரதத்துடன் இணைத்தும், சிறுவர் நாடகங்களுடன் இணைத்தும் பல முயற்சிகளை 1980 – 1990 வரை வேகமாகக் செய்து கொண்டிருந்தவர் மெளனகுரு. கூத்துக்கலையையும், நாட்டார் பாடல்களையும், தேவார திருவாசகங்களையும், புதுக்கவிதைகளையும் பிரஃடின் நாடக முறைகளையும் இணைத்து தமிழர் பிரச்சினைகளை நாடகமாக்கிக் கொண்டிருந்தார் சண்முகலிங்கம்.மெளனகுருவின் நாடகங்களில் நடித்தும், அவரோடு இணைந்து சிறுவர் நாடகங்களை இயக்கியும் வந்த சிதம்பரநாதன் சண்முகலிங்கத்தின் நாடக நெறிமுறைகளை உள்வாங்கி அவற்றை இயக்கும் நெறியாளராயும் மாறினார். யாழ்ப்பாணத்தின் அன்றைய அரசியல் சூழலில் அரசியலே மையமானது. இராணுவ அடக்கு முறைகள் மேலெழுகின்றன. வெகுசனத் தொடர்பு சாதனங்கள் யாவும் இராணுவத்தின் அடக்கு முறைக்குள்ளாகின.இந்நிலையில் அனைத்துப் பிரச்சினை களையும் கவரக் கூடிய கருவியாக நின்றது நாடக வடிவமே. வெளியில் நாடகம் போட முடியாத நிலை ஏற்பட்ட போது பாடசாலை நாடகம் போடும் இடமாக மாறியது.
இதனால் யாழ்ப்பாணத்தில் கல்வி அரங்கு (Educational Theatre) ஒன்று உருவானது. இக்கல்வி அரங்கில் ஈடுபட்டு உழைத்தவர்களுள் ஒருவர் சிதம்பரநாதன்.சிதம்பரநாதனுக்கு 1989களில் வாய்த்த ஆசியப் பயணம் அவரின் நாடகப் பார்வையை அகலித்தது. Cry of Asia என்னும் புகழ் பெற்ற நாடகக் குழுவுடன் ஐரோப்பியப் பயணத்தினை மேற்கொண்ட போது நாடகம் ஒரு சமூக மாற்றுச் சாதனமாகச் செயற்படும் விதத்தினை அவ்வனுபவங்கள் மூலம் பெற்றுக் கொண்டார். அவர் போட்ட வீதி நாடகங்கள் மக்களுடன் நாடகத்தை நெருக்கமாக்கும் சிந்தனைகளை அவருக்குத் தந்தன.யாழ்ப்பாணத்தின் அரசியல் சமூகக் காரணிகளால் ஒடுக்கப்பட்ட மனங்களுக்கு நாடகம் மூலம் விடுதலை தர முடியுமா? என்ற சிந்தனை அவருக்கு எழுந்தது.அவர் அகஸ்ரோபோலின் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கினால் கவரப்பட்டார்.இவ்வகையில் அகஸ்ரோபோல்,யூஜின் போன்ற சமூக மாற்று அரங்கு பேசிய அரங்கியலாளர்களின் செல்வாக்கு இவர் மீது படிந்தது.ஏற்கெனவே அரங்கை சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக ஈழத் தமிழுலகிற் பலர் பயன்படுத்தியிருந்தனர். அவை முன்திரைகளையும், புறொசினியம் அரங்குகளையும் புறந்தள்ளி மக்களையும் பார்வையாளராக அன்றி பங்கு கொள்வோராக மாற்றிய நாடக விற்பன்னர்களான குறட்டவோஸ்கி, பீற்றர்புறுரக், அகஸ்ரோபோல், ரிச்சட்செக்னர் ஆகியோரின் நாடக நெறிமுறைகளும் இவரைக் கவர்ந்தன. போரம் தியேட்டர், மறைந்து நிற்கும் அரங்கு என்பவற்றில் இவர் கவனம் செல்லுகின்றது.
மேற் குறிப்பிட்ட மேற்குலக நாடக விற்பன்னர்கள் தமது நாடகக் கோட்பாடுகளைக் கிழக்குலகின் சடங்குகளிலும், கூத்துக்களிலும் இருந்து எடுத்தமையை தமது நாடகக் கல்வி மூலம் பெற்ற சிதம்பரநாதன் தனது முனைவர்பட்ட ஆய்வினைச் சடங்குகளின் மீது திருப்புகிறார்.சடங்குகள் மூலம் சடங்கு நிகழ்த்துவோரும், பார்ப்போரும் பேதமின்றி இணைந்து ஒரு காரியத்தை நிறைவேற்றுவதை ஆராயப் புகுகின்றார்.நாடகம் பற்றிய (Turner) டர்னர் இன் கோட்பாடுகளை தன் முறையியலாகப் பிரயோகிக்கின்றார். பார்வையாளரை முழுமையாகப் பங்கேற்க வைப்பது சிதம்பர நாதனின் நோக்கமாகும். சடங்கு வைபோகங்களில் தெய்வம் ஏறி ஆடுபவர்கள் தங்களுடைய ஆளுமையின் ஸ்திரப்பாட்டிற்கும், பிரச்சினையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கும் எவ்வாறு சடங்கைப் பயன்படுத்துகிறார்களோ அல்லது சடங்கு பயன்படுத்தப் படுகின்றதோ, அதுபோன்றதொரு சூழலை – சடங்கின் சூழலை அரங்கிற்கும் கொண்டுவரச் சிதம்பரநாதன் விரும்பினார்.மத நம்பிக்கைக்குரிய விசுவாசம் சடங்குகளில் உள்ளது. மத நம்பிக்கை சாராத சமூகம், சமூகம் சார் பிரச்சினைகளுக்கான தீர்விற்கு இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என யோசித்து சடங்கு முறைகளையும், அச்சடங்குகள் எவ்வாறு சமூகத் தளைகளால் பிணிப்புற்றிருந்த மனதினை விடுவித்து கிராமச் சடங்குகளில் ஆடுவோரையும், பார்ப்போரையும் மன விடுதலை பெற்றவர்களாக ஆக்குகின்றது என்பதனை ஆராய்ந்து, அம்முறைகள் அரங்கிலும் கையாளப்படலாம் எனச் சிபாரிசு செய்தார் சிதம்பரநாதன்.பங்கு கொள்ளல் அரங்கில் பங்கு கொள்வோர் தங்களுடைய பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசுகின்ற நிலைக்கு ஆளாகின்றனர்.அந்த நிலை சமயச் சடங்குகளில் தெய்வமேறி (கலையேறி) பேசுவதற் கான நிலையோடு இணைத்து அவரது ஆய்வில் நோக்கப்படுகிறது.
சடங்கிலே ஒருவர் தெய்வ சந்நத்தராக ஆகுவதற்கு வருகின்ற படிப்படியான நிலையே கலை (ஏற்ற) நிலை என்று கூறும் சிதம்பரநாதன் கலை நிலை என்பது உணர்வுச் செறிவை ஏற்படுத்தி தெய்வபத்தினுடைய வெளிப்பாட்டோடு உச்சநிலை அடைகின்றது என்கின்றார். தெய்வம் ஏற்றுதலை கலை ஏற்றுதல் என்பார்.இவ்வாறு சமயம் சார் சொற் பயன்பாடான கலையை வாழ்வியல் அரங்கிற்குக் கொண்டு வருதலே சிதம்பரநாதனின் ஆய்வாகும்.சடங்கை மீள் கண்டுபிடிப்புச் செய்தலும் சடங்கு நிலைப்பட்ட பயன்பாட்டைச் சமூக நிலைப்படுத்தி ஆனால் சடங்கு நிலையில காணப்படும் உத்வேகத்துடன் சம கால அரங்கில் செய்யலும் சிதம்பரநாதனின் நோக்கங்களாகும்.இதற்காக அவர் ஈழத்தின் கிராமங்களில்வடக்கிலும், கிழக்கிலும் முக்கியமாக மட்டக்களப்பில் நடைபெறும் கோயில் சடங்குகளில் முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டார்.தன் ஆய்வில் பகுதி 1 இல் ஈழத்து நாடக வரலாற்றில் அரங்கு அளிக்கைகளில் மாற்றம் ஏற்பட்ட தன்மைகளையும் இன்று தேவைப்படும் அரங்கையும் கூறிய அவர் சர்வதேச மட்டத்தில் பங்கு கொள் அரங்கு பயில்நிலையில் உள்ளதை விளக்குகிறார்.பகுதி 2 இல்இல் சடங்குகளை மீள் கண்டுபிடிப்புச் செய்து அச்சடங்குகளுள் எவ்வாறு வளமான பங்கு கொள்ளுதல் தன்மை உடையதாக இருக்கின்றன என்று விளக்கி கிராமிய வழிபாட்டில் கலையேற்றம் செய்யப்படும் முறைமையை விளக்குகிறார்.பகுதி 3 இல் இன்றைய தமிழ்ச் சூழலில் இந்த அறிவின் துணைகொண்டு ஆழமான உணர்வைப் பெறும் வகையில் இப்பங்கு கொள்ளுதல் அரங்கை வளப்படுத்தலாம் என்று கூறுகிறார்சிவத்தம்பி, மெளனகுரு, சுந்தரம்பிள்ளை ஆய்வுகளில், சடங்கு களின் நம்பிக்கைத் தன்மை கேள்விக்குட்படுத்தப் படவில்லை.சடங்கின் நாடகத் தன்மைகளே கூறப்பட்டன.
இப்போது ஒரு நம்பிக்கையின் அடிவேர்களை ஒரு நாடகத்திற்குப் பயன் படுத்துவது பற்றி சிதம்பரநாதன் பேசுகிறார்.இங்கு சடங்கின் நம்பிக்கை கேள்விக்குட்படுத்தப் படுகிறது.நம்பிக்கையுடன் ஈடுபட்ட சடங்கு இங்கு அழகியல் உணர்வுடன் பார்க்கப்படுகிறது. சடங்கு சமூக மாற்றத்திற்குப் பிரயோகிக்கப்படுகின்றது. இதன் மூலம் பிரயோக அரங்கு (Applied Theatre) என்ற ஒரு நாடக நெறி உருவாகின்றது.நாடகத்தின் மானிடவியல் இது (Anthropology of Drama) கிராம வாழ்க்கைதான் அற்புதமான வாழ்க்கை. கிராமங் களிலிருந்தே நகரங்கள் தோன்றின. கிராம நாகரிகமே நகர நாகரிகத்தின் அடிப்படை நகர நாகரிகம் எல்லாவற்றையும் சிதைத்து விட்டது. எனவே கிராமங்களுக்குத் திரும்புங்கள் (Back of Village) என்று மாறி வரும் உலகை நோக்கிக் கூறினார் மகாத்மா காந்தி.சடங்கு நிலைதான் அற்புத நிலை.பார்வையாளர், நடிப்போர் பேதமற்ற நிலை. மனத் தடைகளை அறுத்து மனித மனதை விடுதலை செய்யும் நிலை. சடங்குகளிலிருந்தே நாடகம் தோன்றியது.இன்றைய நாடகங்கள் பார்வையாளரையும், நடிகரையும் பிரித்துவிட்டன. எனவே, பண்டைய நிலையான சடங்கு நிலைக்குத் திரும்புங்கள் (Back of Ritual) என மாறி வந்த நாடக உலகை நோக்கிக் கூறினர் சடங்கை நாடகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள்.இது இன்று நாடக உலகில் வாதப்பிரதிவாதங்க ளுக்கு உட்பட்ட ஒரு கோட்பாடாகும்.சடங்குகள் வேறு நாடகம் வேறு. நாடகம் வரலாற்றுப் போக்கில் தன்னை வளர்த்தெடுத்து ஒர் அழகியல் அனுபவமாக வளர்ந்துள்ளது. பொழுதுபோக்கு அம்சமே அதன் பிரதானம்.கலையின் தன்மையும் அதுதான்.
எனவே சடங்கு சடங்குதான். சடங்கு ஒரு போதும் நாடகமாகாது.எனவே இப்புதிய போக்கினர் போடுவது நாடகமன்று. அது ஒரு சடங்குதான் என்பது சிலர் வாதம். பின்னர் வளர்ச்சி பெற்ற நாடகங்கள் நாடகத்திற்கான தம் பணியில் இருந்து மாறிவிட்டன. நடிப்போர் பார்வையாளர் என்ற பிரிவினை, கருத்தைத் திணிப்போர், கதை ஏற்போர் என்ற இரு பிரிவினரைத் தோற்றுவித்தது.நாடகத்தில் பல பிரிவுகள் உண்டு. அதில் பிரயோக நாடகமும் (Applied Theatre) ஒன்று என்பது சிலர் வாதம்.உலகின் நவீன நாடகக்காரர்களும், சிதம்பரநாதனும் முன் வைக்கும் இக்கருத்துக்கள் நாடக உலகில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆசியாவின் அழுகை நாடகக் குழுவில் தென் ஆசிய தென் கிழக்காசிய நடிகர்களுடன் சிதம்பரநாதன்( 1988)( இது சி மௌனகுரு 2005 இல் எழுதிய ஈழத்தின் தமிழ்க் கூத்தியல் ஆய்வும் ஈழத்துத் தமிழ்க் கூத்தும் எனும் கட்டுரை யொன்றில் சிதம்பரநாதன் பற்றிக் கூறும் பகுதிகள் ஆகும்.)
நன்றி ..நாடகப்பள்ளி